வாழ்த்துரை-1

வண. எஸ். ஜெபநேசன்,
ஆயர் இல்லம், வட்டுக்கோட்டை.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி தனது 125 ஆவது வருட நிறைவைக் கொண் டாடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

விக்ரோறியா கல்லூரி 1876 இல் உதயமாகியது.

அதன் முதல் அதிபராக திரு. W. சிமோல் என்ற ஆங்கிலேயர் பணியாற்றினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிஷன் கல்லூரிகளே ஆங்கிலக்கல்வியில் முதலிடம் வகித்தன.

ஆங்கிலக்கல்விக்கு வசதியில்லாத இடங்களில் ஆங்கிலேய அரசு நேரடியாக ஆங்கிலக் கல்லூரிகளை நிறுவிச் சிறப்புடன் நடாத்தியது.

வலிகாமம் மேற்குப்பகுதியில் நீண்டகாலமாக ஆங்கிலக்கல்வியும் விஞ்ஞானமும் கற்பித்த பெருமை விக்ரோறியாவுக்கு உண்டு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிறந்த தலைவராக விளங்கிய திரு. அ. அமிர்த லிங்கம் இங்கு ஆங்கிலத்தினை ஒரு பாடமாக எடுத்து பல்கலைக்கழகம் சென்றார்.

இவரே விக்ரோறியாவிலிருந்து முதன் முதலாகப் பல்கலைக்கழகம் சென்றவர்.

எமது பெற்றோர் மூளாயில் தேவ ஊழியர்களாகவிருந்த பொழுது (1955- 1963) நான் அடிக்கடி விக்ரோறியாவுக்குச் செல்வேன்.

இதற்குக் காரணம் அப்பொழுது விக்ரோறியாவில் நடைபெற்ற அரிய தமிழ் விழாக்கள் தான்.

கம்பராமாயன மேதை அ. ஞானசம்பந்தன், பன்மொழிப்புலவர் அ. மு. பரமசிவா ணந்தம், வில்லியம் அரியநாயகம், செ. இராசதுரை போன்றோரின் சொற்பொழிவுகளை நான் முதலிலே கேட்டது விக்ரோறியாவிலேதான்.

அந்தக் காலத்தில் வித்வான் பொன். முத்துக்குமாரன், வித்வான் க. கி. நடராஜன் போன்றோர் தமிழ்த்துறைத் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். திரு. எஸ். சிவசுப்பிர மணியம் அப்போதைய அதிபர் என்று நினைக்கின்றேன்.

விக்ரோறியா எனது பால்யப் பருவத்தின் இளமைக் கனவுகளோடு ஒன்றிணைந்த நிறுவனம்.

இப்பொழுது அதிபராக இருக்கும் திருமதி அருந்தவச்செல்வி வேலுப்பிள்ளை எனது மாணவி. அவருக்கு சிறிது காலம் ஆங்கிலம் கற்பிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

இன்று அவர் விக்ரோறியாவின் அதிபராக அரிய பணியாற்றி வருவதனைக் கண்டு பெருமையடைகின்றேன்.

விக்ரோறியாவின் இன்றைய அதிபரும், ஆசிரியர்களும், மாணவர்களும் சிறப்புடன்

நீடுழி வாழ்ந்து கல்லூரிக்கு நற்பெயர் பெற்றுக்கொடுக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.