மலர் ஆசிரியர் பேனாவிலிருந்து

திருமதி. நா. செல்வநாயகம், மலர் ஆசிரியர்

செய்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

என்பது வள்ளுவம். சமூகத்தில் செய்யத் தகாதவற்றைச் செய்வதாலும் செய்யவேண்டிய வற்றைச் செய்யாமல் விடுவதாலும் கேடு விளையும் என்பது இக்குறட்பாவின் கருத்தாகும்.

யாழ்ப்பாணத்தில் அன்பு நெறியாகிய சைவநெறிக்கு ஆபத்து வந்தகாலை சைவப் பண்பாட்டு வளத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் அதனை வளர்க்கவும் தோற்றம்பெற்ற சைவப் பண்பாட்டுக் காவலரண் விக்ரோறியாக் கல்லூரி என்பதை யாழ்ப்பாணத்துச் சைவர்கள் மறந்துவிட முடியாது. ஆங்கிலக்கல்வி கற்பதற்குக் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றவேண்டிய நிலை யாழ்ப்பாணத்துச் சைவர்களுக்கு இருந்தது. இந்நிலை அன்பு நெறியாம் சைவநெறியைப் பின்பற்றும் சைவப் பெரியோர்கள் மனதிற் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

அதற்குப் பரிகாரமாகச் சைவப் பிள்ளைகள் சைவச் சூழலில் கல்வி பயில்கின்ற வாய்ப்பினைக் கொடுக்கும் வகையிற் தோற்றம் பெற்றவளே விக்ரோறியா அன்னை.

நாவலரின் கொள்கைப் பிடிப்பான தமிழ் சைவக் கருத்துக்களை ஏற்று ஆங்கிலக் கல்வியினால் அரசாங்க உத்தியோகம் பெறும் வாய்ப்பையும் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் எழுந்ததே இக் கல்லூரியாகும்.

இக்கல்லூரியின் ஆரம்பத்துக்குபின் இதனைப் பின்பற்றி வேறு பல சைவப் பாடசாலைகள் எழலாயின.

குறிப்பாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்தவகையிலே குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த மதத்தையும் தாய்மொழியையும் பேணுவது ஒரு மனிதனது தலையாய அறமாகும். இப்பேரறத்தைச் சுழிபுரம் வாழ்மக்கள் மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டைக் தொகுதியில் பெருமளவிலும் ஏனைய யாழ் மக்களும் சுமாராகப் பேண வித்திட்ட பெருமைக்குரிய சான்றோன் கல்லூரித் தாபகர் நிச்சிங்கம் கனகரத்தின் முதலியார், அவர்களின் பணியை அவர் மகன் கனகரத்தினம் செல்லப்பா மிகத் திறப்பட ஆற்றியம் மையையும் சைவ உலகு நன்கு அறியும்.

விக்ரோறியா அன்னையிடம் வடமராட்சி, தென்மராட்சி, காரைநகர், வலிமேற்கு பிரதேசம் முழுமையிலிருந்தும் அக்காலத்தில் மாணவர்கள் ஆங்கிலத்தையும், சைவப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ள வந்து சேர்ந்தனர்.

ஒன்றேகால் நூற்றாண்டைக் கடந்த விக்ரோறியாவின் வரலாறு இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

2008 ஆம் ஆண்டிலேயே 125 ஆவது விழா மலரை வெளியிடக்கூடிய வசதியும், வாய்ப்பும் உண்டாகியிருக்கிறது,

பல நாடுகளிலும் விக்ரோறியாக் கல்வித்தாயின் குழந்தைகள் இருப்பதனாலும் விக்ரோறியா அன்னையின் முழுமையாக எழுதப்பட வேண்டியநிலையிலும் காலம் தாழ்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பாடசாலை குறித்த ஆரம்பநாள் பற்றிய அக்கறையோடு கூடிய ஆய்வொன்றினை மேற்கொண்டு பாடசாலையின் தோற்றம் பற்றிய காரணியை இனங்கண்டு கலாநிதி க. குணராசா அவர்கள் 2001 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரையும் கல்லூரியின் வரலாற்றைத் துல்லியப்படுத்தும் சான்றுகளாகக் காணப்படுகின்றன.

இந்துக்கள் ஆன்மீக வாழ்வில் பெரிதும் நாட்டமுடையவர்கள். ஆனால் வரலாற்றுணர்வில் பின்தங்கியவர்களாகவே காணப்படுகின்றனர்.

சுழிபுரம் விக்ரோறியா அன்னையின் வரலாறும் தகுந்தமுறையில் முழுமையாகப் பேணப்பட்டதாகக் காணப்படவில்லை.

இந்நிலையில் வரலாற்றுப் பதிவுகளை முறையான வகையில் பேணி அதனைப் பிற்காலச் சந்ததியினருக்கு உதவக்கூடிய முறையில் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இப் பாடசாலையில் கற்பித்த ஆசிரியச் சான்றோர்கள் சிலரின் வரலாறுகளையும், சமூகத்துக்குத் தேவையான சமூக விஞ்ஞானக் கருத்துக்களையும் வெளிக்கொணருவதாக இம்மலர் வெளி வருகின்றது.

இப்பெருமலருக்கு ஆக்கங்களை எழுதித்தந்த, பெற்றுத்தந்த அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சிறப்பாக க. இந்திரராசா (ஓய்வுபெற்ற உபஅதிபர் விக்ரோறியாக் கல்லூரி) அவர்கள் இம்மலர் உருவாக்கத்தில் பெரிதும் உழைத்தவர். அவருடைய முயற்சி சொல்லில் அடங்காது. மலர்க்குழு உறுப்பினர் அனைவரும் சிறந்தமுறையில் ஒத்துழைப்பு வழங்கினர். அவர்களுக்கும் நன்றி உரித்தாகுக.

பழைய மாணவர் சமூக நிர்வாகசபை உறுப்பினர்களின் பேராதரவுக்கு நன்றி. மலர் சிறந்தமுறையில் உருப்பெற வேண்டுமென்ற பெருவிருப்பில் பலவகையிலும் உழைத்த முன்னாள் அதிபர் க. அருணாசலம் அவர்கட்கும் நன்றி உரித்தாகட்டும். முடிவாக மலர் உருவாகுவதற்கு பல்லேறு வகையிலும் ஆர்வமும் ஊக்கமும் காட்டிய தற்போதைய அதிபர் திருமதி அ.வேலுப்பிள்ளை அவர்கட்கும் நன்றி.

125 ஆவது ஆண்டு நிறைவு மலரை வெளியிடுவதில் விக்ரோறியாச் சமூகம் பெருமை யடைகின்றது.

விக்ரோறியா அன்னையின் புகழ் உலகில் என்றும் நின்று நிலவுவதாக.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.