அதிபரின் ஆசி

திருமதி அ. வேலுப்பிள்ளை அதிபர்

நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் எமது சமூகத்தின் கல்வித் தேவையை நிறைவு செய்த விக்ரோறியாக் கல்லூரியின் அடிச்சுவடுகளை மீள ஒருமுறை பார்ப்பதற்கு இம்மலர் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மலர் கல்லூரியின் வரலாற்று ஆவணப் பதிவேடாக உருவானதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

எம் மண்ணில் சைவச் சிறார்கள் சமயம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கரு வாகக் கொண்டு ஆங்கிலக் கல்வியைப் பெறும் நோக்கோடு 1876 இல் ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்விச்சாலை பலவித இன்னல்களுக்கும். இடையூறுகளுக்குமிடையே எதிர்நீச்சல் போட்டு தனது இலட்சியத்தையும், பாரம்பரியத்தையும் கைவிடாது நாட்டில் முன்னணிக் கல்லூரிகளில் ஒன்றாக நூற்றியிருபத்தைந்து ஆண்டு காலமாக சமூகத்தின் தேவையை நிறைவு செய்து வருவது சாதனையாகும்.

இச் சாதனையில் தம்மை அர்ப்பணித்த நிறுவுநர், முகாமையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற வித்துவ ஆன்மாக்களின் கண்ணீரும், களைப்பும், கடின உழைப்பும், எதற்கும் தயங்காத மனோ வைராக்கியமும் உரமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை நினைவு கூர்வதற்கு இம்மலர் வாய்ப்பளிக்கின்றது. இதன்மூலம் எதிர்காலச் சந்ததியினரையும் கல்லூரி வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பினை வழங்கத் தூண்டும் ஒரு உந்து சக்தியாக இது அமையும்.

இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகின் பல பாகங்களிலும், பல்துறைகள் லும் உயர் பதவிகள் வகிப்பதைப் பார்க்கும்போது தன் மகவைச் சான்றோன் எனக் கேட்கும் தாயாக கல்லூரி மாதா பூரிப்படைகின்றாள். உலகமெலாம் பரந்து வாழும் விக்ரோறியா அன்னையின் மைந்தர்கள் பழைய மாணவர் சங்கக் கிளைகளை உருவாக்கித் தம்மை வளர்த் தெடுத்த தாயின் தேவைகளைக் குறிப்பறிந்து நிறைவேற்றி வருகின்றனர்.

தடைகள் எம்மை சிறைப்படுத்திய போதெல்லாம் அந்தக் கூண்டுகளைத் தகர்த் தெறிந்த ஆசிரியப் பெருந்தகைகள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கு எனது உளங் கனிந்த நன்றிகள்.

வழிதொடர வகுத்தவர்களின் வழியில் தொடரும் எம் பணி இந்தப் புதிய யுகத்திலும் சரித்திரம் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

நவீன யுகத்திற்கமைய விஞ்ஞான தொழில்நுட்ப, தகவல் தொழில்நுட்ப வல்லுநர் களை, நிறைவான மனிதர்களை உருவாக்கி மென்மேலும் விக்ரோறியாக் கல்லூரி வளம்பெற சிவகாமி சமேத நடராஜப் பெருமானை வணங்கி வாழ்த்துகின்றேன்.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.